
மருதமலையில் துண்டறிக்கை கொடுத்த நாதகவினர் கைது: சீமான் கண்டனம்
மருதமலையிலுள்ள முப்பாட்டன் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யக்கோரி துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் அடக்குமுறைச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாடெங்கிலும் படுகொலைகள், வன்முறை வெறியாட்டங்கள், கூலிப்படையினரின் அட்டூழியம், போதைப் பொருட்களின் புழக்கம், கள்ளச்சாராய வியாபாரிகளின் ஆதிக்கம் என மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடில், அவற்றில் தலையிட்டு சமூக அமைதியை நிலைநாட்ட வக்கற்ற திமுக அரசு, துண்டறிக்கை கொடுத்ததற்காக எனது தம்பி, தங்கைகளைக் கைதுசெய்திருப்பது வெட்கக்கேடானது.' 'அன்னைத்தமிழில் அர்ச்சனை' எனக் கூறிய திமுக அரசு, தமிழில் குடமுழுக்கு செய்யக்கோருவோரை எதற்காகக் கைதுசெய்கிறது? திமுகவின் ஆட்சியின் நடந்தேறும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அட்டூழியங்கள், கபடநாடகங்கள் என எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆட்சியாளர் பெருமக்களே! உங்களது அதிகாரத்திமிரும், பதவி மமதையும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.