கனிமொழி கருணாநிதி எம். பியின் அரசியல் வாழ்க்கையை மையமாக கொண்டு 'திராவிட தலைவி' பாடல்! திமுக மகளிர் அணி X வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிறந்தநாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது பிறந்தநாளை முன்னிட்டு, தி. மு. க தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதியின் அரசியல் பயணம் குறித்து பாடகி பூஜா, ராப்பர் அபிஷா ஆகியோர் பாடிய பாடலை திமுக மகளிர் அணியின் அதிகாரப்பூர்வ X வலைத்தளத்தில் வெளியிட்டு, அதனைக் கனிமொழி கருணாநிதிக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
தற்போது இசைக்கலைஞர்களின் அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.திராவிட தீச்சுடராய், தந்தை பெரியாரின் கருத்தியல் போர்வாளாய், பேரறிஞர் அண்ணாவின் வழித்தடமாய், தலைவர் கலைஞர் அவர்களின் அரசியல் அடையாளமாய், தமிழினத்தை வழிநடத்த வந்த திராவிடத்தின் எதிர்காலம் கனிமொழி கருணாநிதி என்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.