மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தமிழகம் சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த மத்திய பாஜக அரசை இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.