நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை மகத்தான வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு. க. ஸ்டாலின் பேட்டி.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை மகத்தான வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்க்கிறேன். திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நகர்ப்புற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். தேர்தலுக்காக இல்லாமல் கொள்கைக்காக கூட்டணி அமைத்தோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் திமுகவின் லட்சியம். மக்களை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை கைப்பற்றியிருக்கிறோம். தேர்தல் வெற்றியை திமுகவினர் அமைதியாக கொண்டாட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணியை தொடர்ந்து கண்காணிப்பேன் என தெரிவித்துள்ளார்.