தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டில் அனைவருக்கும் முழுமையான சமூக நீதி வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கண்டும் காணாமலும் திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சமூக நீதி சார்ந்த விவகாரத்தில் திமுக கடைபிடித்து வரும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் 2008 ஆம் ஆண்டின் இந்திய புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருப்பதால், அதிகாரம் இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது.
அதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.