தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்ததாக பொய் பிரச்சாரம் செய்து இந்தியா முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 18 கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும், திமுக அரசின் தூண்டுதலின் பேரில், கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி செய்வது வெட்கக்கேடானது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டம், ஆளுநர் அலுவலகம் முற்றுகை என்று திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி மக்களைக் குழப்பி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தையும், பாஜக அரசு அம்பேத்கரின் வாழ்வியலையும் அரசியலையும் கொண்டாடும் வகையில் அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதையும் பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசும்போது, அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை தவறாக வேண்டுமென்றே சித்தரித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசியல் நாடகம் நடத்துவதை மக்கள் ஆதரவுடன் பாஜக முறியடிக்கும், என்று அவர் கூறியுள்ளார்.