தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்பட உள்ளது. அந்த வகையில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 3 பகுதிகளைக் கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. மற்ற விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www. tnpsc. gov. in) தெரிந்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.