ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அண்ணாமலை

83பார்த்தது
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அதள பாதாளத்தில் உள்ளது. சென்னை கூலிப்படையின் தலைநகரமாக இருக்கிறது. பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் மு. க. ஸ்டாலின் இதை தீவிரமாக எடுக்காமல், எதை தீவிரமாக எடுக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இவ்வளவு நடந்தும் முதல்வர் தரப்பில் அதற்கான வேகம் வரவில்லை. புலிப்பாய்ச்சல் வரவில்லை. ஆமை வேகத்தில்தான் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது முதல்வர் விழித்துக்கொண்டு, இதன்பிறகாவது, தமிழகத்தில் இனி கூலிப்படைகளுக்கு இடமில்லை என்ற செய்தியை சொல்ல வேண்டும். அதை உடனடியாக நடத்திக்காட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளில் அதிக குற்றங்கள் நடந்துள்ளன. வேங்கைவயல் சம்பவம், எங்கள் கட்சியின் பொருளாளர் வெட்டப்பட்ட சம்பவம், எங்கள் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் வெட்டப்பட்ட சம்பவம், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது என 17 முக்கிய குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி