
சென்னை : 100 நாள் வேலைத் திட்ட முறைகேடு - ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2024-25-ஆம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்தியதில் 78 ஆயிரத்து 784 முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றின் மூலம் ரூ. 14 கோடிக்கும் கூடுதலான தொகை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூகத் தணிக்கை வாயிலாக தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்பட்டமான முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கும் போதிலும், அவற்றின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின்படி பணி செய்து இதுவரை ஊதியம் பெறாதவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.