திருப்பரங்குன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது அதிகார துஷ்பிரயோகம் என தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தருவது உட்பட, அமைச்சரின் பயணத் திட்டம் தொடர்பாக தமிழக காவல்துறையின் முன்அனுமதி பெற்றிருந்த போதிலும், கோயிலின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் அமைச்சர் தடுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட கோயில்களுக்குச் செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அமைச்சர், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதிலளித்துள்ளனர் என்பது கூடுதல் வருத்தத்தை அளிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் உள்ள ஒருவரே இப்படி அவமானப்படுத்தப்பட்டால், நமது மாநிலத்தில் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.