மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கத்தில் நடைபெற்ற தேசிய மருந்தாளுநர் மாநாட்டில் அறிவியல் மலரினை வெளியிட்டார். பிறகு சிறந்த மருந்தாளுநர்களுக்கும், மருத்துவம் சார்ந்த பல்வேறு துறையில் உள்ள மருத்துவ வல்லுனர்களுக்கும் மற்றும் மருந்தியல் மாணவார்களுக்கும் பதக்கங்களையும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மக்கள் மருந்தகம் தமிழகத்தில் 1000 இடங்களில் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். எனவே மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1000 மக்கள் மருந்தகங்கள் கூட்டுறவுத்துறையும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து இச்சேவை தொடங்கப்படவிருக்கிறது என தெரிவித்தார்.