தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, மத்திய அரசின் உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பொருட்கள் அளவு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்திட்டத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, தமிழகம் வந்துள்ளார். அவர், தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டச் செயலாக்கம் தொடர்பாக, தமிழக கூட்டுறவு, உணவுத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து சென்னை நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள 3 நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த குடும்ப அட்டைதாரர்களிடம் பொது விநியோகத் திட்ட சேவை மற்றும் வழங்கப்படும் பொருட்களின் அளவு, தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான மலிவு விலை மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடியினை பார்வையிட்டு, விற்பனை, பொருட்கள் தரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய உணவுக் கழகம், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன உயர் அலுவலர்களுடன் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில், இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.