அண்ணாநகர் அன்னை சத்யா நகர் 6வது தெருவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டிலை தூக்கி வீசியது தெரியவந்தது. அவர், மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டை வீசினார். அவரை மடக்கி பிடித்து, அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாலமுரளி (31) என்பதும், இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ரவுடி பாலமுரளி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் அடிதடி தகராறு வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் இருந்தேன். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தேன். சென்னை புழல் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசினேன், என தெரிவித்தார். இதுதான் உண்மையான காரணமா அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.