சென்னை: சென்னை அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக மருது சேனை என்ற அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார். மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், தி. நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்டு பிரச்சினையை ஏற்படுத்த மதுரை கள்ளிக்குடியைச் சேர்ந்த ‘மருது சேனை’ என்ற அமைப்பின் தலைவரான ஆதிநாராயணன் முயற்சி செய்ய இருப்பதாக உளவுத்துறை மூலம்சென்னை பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆதிநாராயணன் மீது குற்ற வழக்குகள் உள்ளதால், அவரை போலீசார் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியலில் வைத்துள்ளனர். அசம்பாவித சம்பவத்தை முன்கூட்டியே தடுக்கும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாண்டிபஜார் மற்றும் தேனாம்பேட்டை போலீஸார் ஒருங்கிணைந்து தனிப்படை அமைத்து ஆதிநாராயணனை தேடி வந்தனர்.
சென்னை அடுத்த ஆவடி காந்திநகர், நாகவள்ளி அம்மன் கோயில் தெருவில் அவர் தங்கி இருந்ததை போலீசார் நேற்று முன்தினம் கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்ற போலீஸார் அவரை சுற்றிவளைத்தனர். அவரது காரை சோதனை செய்தபோது அதில் 3 இரும்பு பைப், 2 கத்தி ஆகியவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் ஆதிநாராயணனை கைது செய்தனர்.