மதுரை, நெல்லை, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பல்லாவரத்தை சேர்ந்த முரளி (59) என்பவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரது உடலுக்கு அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். மருத்துவமனை டீன் தேரணிராஜன், தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) இப்ராகிம்மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானமாக வழங்கியுள்ள 250-வது நபரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மட்டுமே கல்லீரல் மாற்றுஅறுவை கிசிச்சை செய்யப்பட்டு வந்தது. தற்போது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. வரும் ஆண்டுகளில், திருநெல்வேலி, மதுரை, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இதற்கான உரிமங்கள் பெறப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட உள்ளது என அவர் கூறினார்.