அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் மாநகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாநகராட்சி சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
மாநகராட்சி மருத்துவத் துறையின் கீழ் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரச் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியில் பணியாற்றும், பணியாற்றிய உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்படுவ தாகவும், அதிக நேரம் வேலை வாங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி செங்கொடி சங்க நிர்வாகிகள் கூறியதாவது, மாநகராட்சியில் இது நீண்ட காலமாக இருக்கும் நடைமுறைதான். மாநகராட்சியில் அதிகாரியாக ஏற்கெனவே பணியாற்றியபோது, அவர்களின் வீடுகளுக்கு தூய்மைப் பணி, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, முதியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கவனித்துக்கொள்வது போன்றவற்றுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள்.
அதற்காக அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கப்படுவதில்லை. ஆனால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாநகராட்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன என அவர்கள் கூறினர்.