மேற்குவங்க பெண் கொலை வழக்கு: சென்னையில் வாலிபர் கைது
அண்ணனின் காதலியை கொலை செய்து விட்டு, அப்பாவிபோல் சென்னை ஓட்டலில் வேலை செய்த மேற்கு வங்க இளைஞரை சென்னை போலீசார் கைது செய்து அம்மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் தார்ஜி (27). சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக சமையலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது, திருமணமாகி தனியாக வசித்து வரும் அண்ணன், அவரை சந்தித்துள்ளார். தான் ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாகவும், தற்போது தொடர்பை விட்டுவிட்ட நிலையில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 7ம் தேதி சிலிகுரி நகரம், பாக்தி நகர் காவல் நிலையப் பகுதிக்கு அந்தப் பெண்ணை வரவழைத்து, கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அபிஷேக், சென்னை திரும்பி வழக்கம்போல் நட்சத்திர ஓட்டலில் பணி செய்துள்ளார். பாக்தி நகர் போலீசார், அபிஷேக்கின் அண்ணனை கைது செய்தனர். பின்னர், அவர்கள் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்தை சந்தித்தனர். அவரது உத்தரவின்பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் மேற்கு வங்க போலீசாருக்கு உதவியாகச் சென்று நட்சத்திர ஓட்டலில் வழக்கம்போல் பணியிலிருந்த அபிஷேக்கை கைது செய்தனர்.