பல கோடி சொத்து எப்படி வந்தது: மகா விஷ்ணுவிடம் விசாரணை
சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத்தொடர்ந்து வந்தபுகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சேட்டு விசாரணை நடத்தி மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் ‘எனது கனவில் சித்தர்கள் கூறியதைத்தான் பேசினேன்’ என்று போலீசாரிடம் மகாவிஷ்ணு மீண்டும் வாய்க்கு வந்தபடி கூறினார். பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் யூடியூப்பில் பேசிய கருத்துகளும் நீக்கப்பட்டன. இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணுவை பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று(செப்.11) போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 5 நாள் அவகாசம் கேட்டனர். நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றம் அவரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவிடம் ‘கனவில் சித்தர்கள் பேசுவது உண்மையா அல்லது சித்தர்கள் பெயரை தவறாக பயன்படுத்தி ஏமாற்றுகிறாரா? தியானம் செய்வது உண்மையா, குறுகிய காலத்தில் பிரபலமானது எப்படி? பரம்பொருள் அறக்கட்டளைக்கு பல கோடிக்கு சொத்து வந்தது எப்படி என போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.