
சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் - ஆட்டோ ஓட்டுனர் கொலை
சவாரி செல்லும்போது பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியதால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார். சென்னை அண்ணா நகர் எம்ஜிஆர் காலனி நேரு தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநருமான செல்வம் (50) என்பவரும், அண்ணா நகர் 11-வது மெயின் ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ இயக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஆட்டோ ஸ்டாண்டில், முனியப்பனுக்கும், செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது, செல்வம் அருகில் கிடந்த கட்டையை எடுத்து, முனியப்பனின் தலையில் அடித்துள்ளார். பலத்த காயமடைந்த முனியப்பனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் போலீஸார், செல்வத்தை கைது செய்தனர். முனியப்பன் சவாரிக்கு வரும் பொதுமக்களிடம் அதிக பணம் கேட்பதாகவும், இதனால் ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் செல்வம் புகார் கூறியதால், அவர்கள் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.