
சென்னை: விபத்துகளை தடுக்க ஏ. ஐ கேமரா: போலீசார் தகவல்
விபத்து, விபத்து உயிரிழப்புகளை குறைக்கவும், விரைவான போக்குவரத்தை உறுதி செய்யவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் சாலை சந்திப்புகளில் நின்றவாறு அபராதம் விதித்து வந்த போக்குவரத்து போலீசார் தற்போது ஆங்காங்கே நவீன கேமராக்களை நிறுவி அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் செல்லிடத்தேக்கு குறுந்தகவல்களாக அனுப்பி வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தானியங்கி கேமராக்களும், விதி மீறல் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு அதுவாகவே அபராதம் விதித்து விடுகிறது. வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் விதி மீறல் தொடர்பான புகைப்படங்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் முறையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் புகுத்தி உள்ளனர். முதல் கட்டமாக சென்னையில் ஐவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் 200 கேமராக்களில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சென்னையில் மேலும் 200 கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.