சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி 24வது பிரதான சாலையை சேர்ந்தவர் பத்மா (30). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த ஜூலை மாதம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது வீட்டில் இருந்து 65 சவரன் நகை திருடுபோனது. எனது சொந்த ஊரை சேர்ந்த வினோதினி (32) என்பவரை வீட்டு வேலைக்கு சேர்த்தேன். அவர் பின்னர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். அவர்மீது சந்தேகமாக உள்ளது, என தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார், வினோதினி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது செல்போன் எண்ணை டவர் மூலம் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்.,27) வடபழனி பகுதியில் வினோதினியின் செல்போன் எண் சிக்னல் காட்டியது. உடனே போலீசார், விரைந்து சென்று வினோதினியை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், மருத்துவர் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகைகளை விற்று, அதில் வந்த பணத்தில் மலேசியாவுக்கு சென்றதாகவும், கள்ளக்காதலுடன் சொகுசாக வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடைசியாக வடபழனி பகுதியில் உள்ள ஒரு அடகு கடையில் நகைகளை அடகு வைப்பதற்கு வரும்போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.