சென்னை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னையில் செப். 15-ம் தேதி வரை சிலைகளை கடலில் கரைப்பதற்காக போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். குறிப்பாக, செப். 11, 14, 15-ம் தேதிகளில் பெரிய அளவிலான சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சிலைகளை கிரேன் மூலமாக கடலுக்கு எடுத்து சென்று, கடலுக்குள் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (செப்.,15) காலை முதல் சென்னை, புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஒவ்வொரு கடற்கரை பகுதிகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட இருக்கின்றன. இதனால், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளிலும் போலீஸார் சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.