மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழக சுகாதாரத் துறை கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று ( செப்.21) தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 632 கோடியே 80 லட்சம் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்போரை ஊக்குவித்து, அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கப் பரிசும் "நற்கருணை வீரன்" எனும் பட்டமும் வழங்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் ரூ. 387 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் மட்டும் 3 லட்சத்து 13, 864 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ரூ. 1, 018. 85கோடியில் 19 அரசு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனைகளாகவும், 6 அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணிகளும் நடைபெறுகின்றன.
தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அமைச்சர், குஜராத், மேகாலயா மாநில மருத்துவக் குழுக்கள் பாராட்டு தெரவித்துள்ளனர். 3 ஆண்டுகளில் தமிழக சுகாதாரத் துறை 545 விருதுகளை பெற்றுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழகம் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.