உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளித்து மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மாற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம், இந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதையொட்டி மாநில தேர்தல்ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கியுள்ளது. இதையொட்டி, வாக்குப் பெட்டிகளை சரிபார்க்கும் பணிகளுக்காக, சமீபத்தில் நிதி ஒதுக்கி, அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது. முன்னதாக, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் கோரியது.
தேர்தல் ஆணையம், சில கேள்விகளை எழுப்பி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கேள்வி கடிதத்துக்கு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளித்த நிலையில், அதனை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.