ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, நாதக இடையே மறைமுக கூட்டணிக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், டெல்லி மாநிலத் தேர்தல் தோல்வி இந்தியா கூட்டணியின் தோல்வி. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்து பிஹாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் ஆகிவிடும்.
எனவே, இந்தியா கூட்டணியின் கலந்தாய்வுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது.
பாஜகவும் அதே நிலைபாட்டை எடுத்தது. எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க விரும்பாமல், இவ்விரு கட்சிகளும் இணைந்து நாதகவுக்கு ஆதரவை நல்குவது என்னும் மறைமுக உடன்பாடு செய்துகொண்டனரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அதாவது, நாதக மற்றும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மறைமுகமான கூட்டணி ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.