புழல்: மெத்தபெட்டமின் போதை பவுடர் புழக்கம்.. 6 பேர் கைது
புழல் பகுதியில் போதைப் பொருள் மெத்தாபெட்டமின் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் பாடி மேம்பாலம் அருகில் குற்றவாளிகளைத் துரத்திச் சென்று பிடித்தனர். பாடி மேம்பாலம் அருகில் பிரபல துணிக்கடையின் அருகில் சந்தேகத்திற்கிடமான 6 பேரை மாறுவேடத்தில் இருந்த போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து புழல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். உயர்நீதிமன்ற பாதுகாப்பு காவல் பெண் உதவி ஆய்வாளரின் கணவர் வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த குமரவேல், புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த தீபேஷ் பார்த்திபன், ஓட்டேரியைச் சேர்ந்த அமீர்பாஷா, எஸ்.எஸ். புரம் சுபாஷ், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மைக்கேல் ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் ஆன்லைன் ஆப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 3 கிராம் மெத்தாபெட்டமின் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பெண் காவல் உதவி ஆய்வாளரின் கணவர் இந்தக் குற்றச் சம்பவத்தில் முக்கிய அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.