விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ரூ. 6. 20 கோடி மதிப்பீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் மற்றும் ரூ. 5. 60 மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
ஒரு காலத்தில் பின் தங்கிய பகுதியாக இருந்த திருச்சுழி இன்றைக்கு மிக வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது என்றும் சாலைகளே இல்லாத பகுதிகள் தற்போது மாநில நெடுஞ்சாலைகளாக, மாவட்ட நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் திருச்சுழி எல்லா வகையிலும் முன்னேற கூடிய பகுதியாக இருப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் நாம் முன்வைக்கும் அத்தனை கோரிக்கைகளுக்கும் அனுமதி அளித்து உதவி வருகிறார் என்றார். இதன்மூலம் கிராமங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி வருவதாகவும், மற்றொருபுறம் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பேரில் சமத்துவபுரம் உருவாக உள்ளது. இன்றைய தினம் துவங்கப்பட்ட திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடைந்து இங்கிருந்து பேருந்துகள் புறப்படும் காட்சியை நாம் காண வேண்டும்.