சிவகாசி அருகே திருத்தங்கல்லில் சாலையில் திரியும் மாடுகள்
அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்.
விருதுநகர் மாவட்டம் ,
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படுத்து உறங்கும் மாடுகள் கண்ணுக்கு தெரியாததால், டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. சில சமயத்தில் பலத்த காயமடைந்து உயிரிழக்கும் சம்பவமும் நடக்கின்றது. சாலையோரம் உள்ள கழிவுகள் மேய்வதற்காக மாடுகள் சாலையில் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக திரிவது வழக்கம். மாடுகள் வளர்ப்போர், அவைகளுக்கு தீவனத்தை வாங்கி போடாமல் மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் மாடுகள் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களிலும் திரிகின்றன. சிவகாசி மண்டல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சாலையில் மாடுகள் சுற்றிதிரிவது குறைந்துள்ளது.
ஆனால் திருத்தங்கல் மண்டலத்தில் விருதுநகர் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.