விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பனையடிப்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2.40 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், கோட்டைபட்டி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும், கோட்டைபட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.60 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.