விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயரங்கபுரத்தில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்ற நிலையில் ரசாயன கலவை கலக்கும் பணியில் ஈடுபட்டு வரும் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் 50, என்பவர் பணி முடிந்து உடலை சுத்தம் செய்ய வந்தபோது பீடி பற்ற வைத்துள்ளார்.
அப்போது அதன் தீப்பொறி உடலில் பட்டதில் தீ பற்றி ஜெயக்குமார் பலத்த தீக்காயமடைந்தார். 70 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.