விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பது, உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஊராட்சி-நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் 8-ம் வகுப்பில் இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர். மேலும் மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம் பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்து உரைத்து, பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.