விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி என்பவர் மகன் கருப்பசாமி(38). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் உள்ளனர். கருப்பசாமி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அவரது மனைவி முத்துலட்சுமி விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கருப்பசாமி பாலவநத்தம் கிராமத்தில் உள்ள சபரி ஹோட்டல் என்ற தனியார் உணவகத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். அப்போது உணவகத்தின் முன் பகுதியில் தொங்கு சாரம் கட்டி மூன்றாவது மாடியில் வெளிப்பகுதியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாரம் அறுந்து கருப்பசாமி மேலே இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்து அவர்களுடன் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்ததில் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தாலுகா காவல் நிலைய போலீசார் கருப்பசாமி உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கருப்பசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி முத்துலட்சுமி கதறி அழுத சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.