மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் இடுபொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி நடந்தது. ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சிக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரவணன் வரவேற்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கூறுகையில், 'விவசாயிகள் பயிருக்கு தேவையான உரங்களை மண் மாதிரி முடிவின் அடிப்படையிலும், அவசிய தேவையின் அடிப்படையில் மட்டுமே உரமிட வேண்டும். தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை அங்கக உரங்களையும், உயிர் உரங்களையும் பயன்படுத்திட வேண்டும். பஞ்சகாவியா, மீன் அமிலம், மண்புழு உரம், ஐந்திலை கரைசல், பூச்சி விரட்டி, ஜீவாமிர்தம் ஆகியவற்றை வீட்டிலேயே தயாரித்து பயிருக்கு பயன்படுத்திட வேண்டும். இதற்கு அரசு குழுவிற்கு தலா ஒரு லட்சம் மானியம் வழங்க உள்ளது' என்றார். ஊராட்சி தலைவர் சார்லஸ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி வேளாண் அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.