வேலூர்: சமையல் கியாஸ் கசிந்து தீ விபத்து!

77பார்த்தது
வேலூர்: சமையல் கியாஸ் கசிந்து தீ விபத்து!
வேலூர் காகிதப்பட்டறை மேலாண்டைதெருவை சேர்ந்தவர் வேலு. இவருடைய வீட்டில் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த புரூகான் (24) மற்றும் சில வாலிபர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக அந்த வீட்டில் குல்பி ஐஸ் தயாரித்து வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் அவர்கள் சமையல் மற்றும் குல்பி ஐஸ் தயாரிப்பதற்காக பால் காய்ச்சியதாகவும், அதன்பின்னர் சிலிண்டரை சரியாக அணைக்காமல் தூங்க சென்றதாக கூறப்படுகிறது. அதனால் கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவி உள்ளது. இந்த நிலையில் புரூகான் ஐஸ் தயாரிக்க பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது அறை முழுவதும் பரவியிருந்த கியாஸ் பற்றி எரிந்தது.

வீட்டின் சிமெண்டால் ஆன மேற்கூரை வெடித்து சேதமடைந்தது. புரூகானின் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததால் சூடு தாங்க முடியாமல் அங்கும், இங்குமாக அவர் ஓடினார். அவரின் அலறல் சத்தம் கேட்ட உடன் தங்கியிருந்த வாலிபர்கள் உடனடியாக துணியை உடல் மீது போர்த்தி தீயை அணைத்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு புரூகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்துவேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்றனர்.

தொடர்புடைய செய்தி