வேலூர், சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன் - வயது 24, சதீஷ் - வயது 21, சீனிவாசன் - வயது 20. இவர்கள் 3 பேரும் கஞ்சா போதையில் தொடர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். குறிப்பாக, சி. எம். சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துகொள்வதற்காக அறை எடுத்து தங்கியுள்ள வடமாநிலத்தவர்களை தாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி, சி. எம். சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வெளியில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியை இந்த 3 இளைஞர்களும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்திருக்கின்றனர்.
தகவல் தெரியவந்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற வேலூர் வடக்கு காவல் நிலையப் போலீஸார் சதீஷ் உட்பட 3 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2கிலோ கஞ்சா பொட்டலங்களும் பிடிபட்டன.
உடனடியாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்களும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை வெளியே விட்டால் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி 3 பேரின் காவலையும் குண்டர் சட்டத்தின்கீழ் நீட்டிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 3 இளைஞர்களிடமும் குண்டர் சட்ட நடவடிக்கைக்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.