திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதூர் நாடு, சேம்பரை ஆகிய மலை கிராமங்கள் மற்றும் தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் உள்ள மாதகடப்பா மலை, வெலிதிகமாணிபெண்டா ஆகிய மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், கடத்தல் ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கண்காணிக்கவும் மீண்டும் அவர்கள் குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்கவும் ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 5 போலீசார் அடங்கிய குழு 24 மணி நேரமும் சுழற்றி முறையில் மலை கிராமங்களில் முகாமிட்டுள்ளார்கள்.
புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட சட்டத்தின்படி குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டும், சொத்துக்கள் பறிமுதல் செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து சாராய குற்ற செயலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் சொத்தானது அரசு சொத்துடன் இணைக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை மாவட்டம் முழுவதும் 3 பழைய குற்றவாளிகள் மனம் திருந்தி சமூகத்துடன் ஒன்றி வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். மனம் திருந்தி சாராய தொழிலை கைவிட்டு சமூகத்துடன் ஒன்றி வாழ விரும்பும் நபர்கள் எந்த நேரமும் எஸ்பி அலுவலகத்தை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.