பணமோசடி; உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள்!

75பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் பெருகி வரும் இணையதள குற்றங்களை தடுக்க வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். மர்மநபர்களும் புதுப்புது வடிவங்களில் கைவரிசை காட்டுகின்றனர். சமீப காலமாக பிரபல தனியார் வங்கி பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி பண மோசடி நடக்கிறது.

இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: செல்போன் எண்ணுக்கு ஒரு வங்கியின் பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய குறுந்தகவல் மர்மநபர்களால் அனுப்பப்படுகிறது. அதில் உங்களது வங்கிக்கணக்கு முடங்கப்பட்டு விட்டது, காலாவதியாகி விட்டது என்றும் அதை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த குறுந்தகவலில் ஒரு லிங்க் அனுப்பி, அதில் வரும் செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவிட கூறுவார்கள்.

அதை நம்பி நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டால் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். எனவே வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் வங்கி தொடர்பான குறுந்தகவலை நம்பி பணத்தை இழந்து ஏமாறவேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி