திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வுதுறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து போதைக்கு யாரும் அடிமையாகக் கூடாது, போதைப் பழக்கத்திற்கு நான் ஆளாக மாட்டேன்,
என்னை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் பொதுமக்களை போதைப் பொருளை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.