நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மீன் மற்றும் கோழி, ஆடு, மாடுகளை கொன்று அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ஜானகிக்கு புகார்கள் சென்றன.
அவரின் உத்தரவின் பேரில் 4-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் பாகாயம், தொரப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் தடையை மீறி மீன், இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொரப்பாடி சோளாபுரி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் கோழி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 35 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து, அவற்றை மண்ணில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.