சோளிங்கர் அருகே சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளில் இருந்து கழிவு நீர் கால்வாய் வழியாக மின்மாற்றி எதிரில் உள்ள சுமார் 30 ஆண்டு முன்பு கட்டப்பட்ட சிறுபாலம் வழியாக வெளியேறுகிறது.
இந்த சிறுபாலத்தின் உள்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் கால்வாய் அடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
மழைக்காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளிலும், தெருக்களிலும் தேங்கி விடுவதால் அந்த வழி யாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு புதிய சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.