திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்காவடி, மயில் காவடி, புஷ்பகாவடி எடுத்துச் சென்று வழிபாடு செய்வர். வந்தவாசி சுற்றியுள்ள அம்மையம்பட்டு, கீழ்வில்லிவளம், மாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடிக்கர்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மங்கள மேள வாத்தியங்களுடன் பால் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடி எடுத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றனர். இந்த ஊர்வலம் வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே தொடங்கி புதிய பேருந்து நிலையம், தேரடி பகுதி, பஜார் சாலை பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றது. இந்த காவடி ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், செங்கம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி டிஎஸ்பிக்கள் 13 காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 400 காவலர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.