திருவண்ணாமலை மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு கறவை மாட்டு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துகொண்டு ரூ 10 கோடி மதிப்பில் 1094 பயனாளிகளுக்கு 2188 கறவை மாடு கடன் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் எ. வ. வேலு உலக பால் உற்பத்தியில் 2018 ஆம் ஆண்டில் 22 சதவீகித உற்பத்தி இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுவதாகவும், பால் உற்பத்தியில் தான் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் என்றும் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயதொழிலாக கோழி உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி தான் உள்ளது.
பால் உற்பத்தியில் மாநில அளவில் மூன்றாவது இடத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் இந்தியன் வங்கி வழங்கும் கறவை மாட்டு கடன்கள் மூலம் விவசாயிகள் கறவை மாடுகளை பெற்று பால் உற்பத்தி செய்து முதன்மை மாவட்டமாக கொண்டுவர வேண்டும் என்றார். விவசாயத்தொழிலை நம்பி வாழும் திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்தொழிலுக்கு உதவியாக கால்நடைகள் அதிக அளவில் உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி ஒன்று அமைக்க கோரி தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாவட்டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்றார். இவ்விழாவில் இந்தியன் வங்கி மேலாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.