திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தீபத் திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, அறநிலையத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபத் திருவிழாவுக்கு 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 21 ஆயிரம் கார்களை நிறுத்தும் வகையில் 120 கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகின்றன. 3,408 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபத் திருவிழா நாளில் கோயிலுக்குள் 11,500 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. எனவே, பரணி தீபத்துக்கு 500 அனுமதி அட்டைகளும், மகா தீபத்துக்கு 6 ஆயிரம் அனுமதி அட்டைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும். பரணி தீபத்துக்கு 6,600 பேரும், மகா தீபத்துக்கு 11,600 பேரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றார்