திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வரும் 2-ம் தேதி வரை நடைபெற உள்ள மனித நேய வார விழாவை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாட்டியம், கட்டுரை, நல்லிணக்க கூட்டங்கள், வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனித நேய வார விழாவை நேற்று கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தொடங்கி வைத்தார். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக மூன்று நபர்களுக்கு தலா ரூ.6990 மதிப்பிலான கட்டணமில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். மேலும், விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் ரவி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.