திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
நீண்ட காலமாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தாராததால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. மழை பெய்யும் இந்த நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக வடிகால் வசதி இன்றளவும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவதிக்கு உள்ளாகி வருகின்றோம். அத்துடன் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் குடியிருப்பை சூழ்ந்து உள்ள தண்ணீரால் வீடுகளின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இதனால் பல லட்சம் செலவு செய்து கட்டிய வீடுகளின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. இது குறித்து நிர்வாகத்துடன் தெரிவித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மன்றாடி வருகின்றோம்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மின்நகர் பகுதியில் ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாய், மழை நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தெரிவித்தனர்.