திருப்பூர் முருகம்பாளையம் மங்கலம் ரோடு சூர்ய கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் உரிய ஜோலி மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு ஒருவர் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை அந்த மருந்து கடைக்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன், வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஜோலி அகஸ்டின் (வயது 64) என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. மேலும் ஊசிகள், பாதியளவு பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், புண்களுக்கு கட்டு போட பயன்படுத்திய துணிகள் ரத்தக்கறையுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக அந்த மருந்துக்கடையை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். ஜோலி அகஸ்டினிடம் விசாரித்தபோது, உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், அதற்கு கட்டணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோலி அகஸ்டினை கைது செய்தனர்.