திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசும்போது "சாலை வளைவுகள், சாலை சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள் போன்ற பகுதிகளில் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்புக் குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றார்.
முன்னதாக, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட வன அதிகாரி தேவேந்திரகுமார் மீனா, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் கிரிஷ்யாதவ் அசோக், சுஜாதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயராமன், தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.