திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலத்தை சேர்ந்த அபு (எ) இப்ராஹிம் என்பவர் கடந்த ஐந்து மாதங்களாக கழிவு பஞ்சுகளை அரைத்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 20 வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். இன்று ஆலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் இயந்திரங்களை பழுது பார்த்தபோது திடீரென ஆலையின் பின்புறம் கழிவுகளை வெளியேற்றும் பகுதியில் இருந்து தீப்பிடிக்க தொடங்கியது. தீ ஆலை முழுவதுமாக பரவி கழிவுபஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் முழுவதுமாக பற்றி எரிய தொடங்கியது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக திருப்பூர் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் மற்றும் கட்டிடங்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது. தீயினை அணைப்பது பெரும் சவாலாக உள்ள நிலையில் கூடுதலாக தண்ணீர் லாரிகளைக் கொண்டு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.