தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பாமாயிலை தடை செய்ய வேண்டும் எனவும் அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் 100 நாள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது வரை 26 நாள் போராட்டத்தை வெற்றிகரமாக முடிந்தது. காங்கேயம் வடசின்னரிபாளையம் ஊராட்சி கல்லாங்காடுபுதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு 27 வது நாள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி, பிஏபி நீர் பாசன பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாமாயில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். பிஏபி பாசன திட்டத்தில் ஒப்பந்தத்திற்கு உட்பட்ட ஆனைமலை - நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.