தாராபுரத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மது போதை மறுவாழ்வு மையத்தில் 36 பேர் அடைத்து வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். காங்கேயம் களிமேடு பகுதி பங்களாபுதூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி இந்த மது போதை மறுவாழ்வு மையத்தில் 6 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போதை மறுவாழ்வு மையத்தில் கொடுக்கப்பட்ட மருந்துகளால் பாதிப்பு ஏற்பட்டு மணிகண்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார்.
எனவே அனுமதியின்றி நடத்திய வெற்றி லைஃப் கேர் பவுண்டேஷன் உரிமையாளர் கள்ளிமந்தயம் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் மேலும் இறந்த மணிகண்டனின் மனைவி மற்றும் ஐந்து வயது சிறுவன் மற்றும் 18 மாத குழந்தை ஆகியோரின் வளர்ப்பு செலவிற்கு உரிய இழப்பீடு பெற்று தர வலியுறுத்தியும் இறந்த மணிகண்டனின் பெற்றோர், மனைவி ஆகியோர் தாராபுரம் காவல் நிலையம் அருகே உள்ள தாராபுரம்- மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அழைத்து பேசி புகார் மனுவை பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து தருவதாக தெரிவித்தனர். போராட்டத்தை கைவிட்டனர்.